ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே. உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து, உமா மகேஸ்வரியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிஆர்பிசி பிரிவு 174 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே, என்டிஆருக்கு 8 மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். நான்கு மகள்களில் தற்போது தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரி இளைய மகள் ஆகும். என்டிஆர் மூன்று மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய என்.டி.ஆர். 1982 இல் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி, அப்போது பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்பது மாதங்களுக்குள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார். என்.டி.ராமராவ் 1996-ல் தனது 72வது வயதில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.