தஞ்சையில் பொதுமக்களுக்கான விமான சேவை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று மாநிலங்களவையில் திமுகவின் புதிய உறுப்பினரான எஸ்.கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்வியில், ”தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பொதுமக்களுக்கான விமான சேவை கொண்டுவரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இல்லையெனில் அதன் காரணம் தருக. இதுவரையும் அதற்காக எதுவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டிருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ”மத்திய அரசு கடந்த 2008இல் பசுமை விமான நிலையங்களுக்கானக் கொள்கையை அமைத்துள்ளது.
இதில், நாடு முழுவதிலும் பசுமை விமானநிலையங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விமானநிலையம் அமைக்க விரும்பும் நிறுவனம் அல்லது மாநில அரசு, மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கு திட்ட அறிக்கையை அனுப்ப வேண்டும். இதற்கான முறைகள் பசுமை விமான நிலையத்திற்கான இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஒதுக்கப்படும் நிலம் மற்றும் கொள்கை ரீதியான அனுமதி ஆகியவை என 2 கட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்களை மத்திய விமானப் போக்குவரத்து துறை விதிமுறைகளின்படி பரிசீலிக்கிறது. தஞ்சையில் பொறுத்தமட்டில் இதுவரை எந்த விண்ணப்பங்களும் அரசிடம் வரவில்லை.
தஞ்சையில் இந்திய விமானப்படையின் விமானநிலையம் ஏற்கனவே அமைந்துள்ளது. இதில், இந்திய விமானநிலைய அதிகார நிறுவனத்திற்கு 26.5 ஏக்கர் சொந்தமான நிலம் உள்ளது. எனினும், இந்த நிலம் பொது விமானநிலையம் அமைக்க போதுமானதாக இல்லை. எனவே, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானநிலைய அதிகார நிறுவனம் ஆகிய இரண்டும் தம் நிலங்களை பறிமாறி புதிய என்க்ளேவ் அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மேலும், மத்திய விமான போக்குவரத்து துறையின் சார்பில் பிராந்தியங்களை இணைக்கும் திட்டம் (ஆர்சிஎஸ்) ‘உடான்’ எனும் பெயரில் 2016 முதல் செயல்படுகிறது. இதில், பிராந்தியப் பிரதேசங்களை குறைந்த கட்டண விமானசேவை மூலம் இணைக்கப்படுகிறது. இந்த ஆர்சிஎஸ் மூலம் தஞ்சாவூரின் விமானநிலையம் அமைக்க இரண்டாம் கட்ட ஏலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், விமானநிலையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.