கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை அவரது அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகில் உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் இருவரும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்நனர். வீட்டின் மொட்டைமாடியில் ஷபீக் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அண்ணன் சாதிக் வீட்டின் முன்புறம் நின்றபடி சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த தம்பி ஷபீக் திடீரென்று கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலைகீழாக தரையில் தலை முட்டும் வகையில் அவர் வேகமாக கீழே விழுந்து கொண்டிருந்தார். இதனை கீழே நின்று பார்த்த அண்ணன் சாதிக் பதறிப்போய் தனது கையில் இருந்த தண்ணீர் பைப்பை வீசிவிட்டு தனது தம்பியை மார்போடு சேர்த்து அனைத்து பிடித்தார். இதனால் ஷபீக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கிடையே கீழே விழுந்த ஷபிக்கை அவரது அண்ணன் சாதிக் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி ஷபீக் கூறுகையில், நான் எப்படி மேலே இருந்து கீழே விழுந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. கண்இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக என் அண்ணன் என்னை காப்பாற்றி இருக்கிறான் என்றார். இதுபற்றி அண்ணன் சாதிக் கூறுகையில், திடீரென்று என் தம்பி மாடியில் இருந்து தலைகீழாக கீழே வந்ததை பார்த்து அதிர்ச்சியானேன். அடுத்த நொடியில் சுதாரித்துக் கொண்டு அவரை கேட்ச் பிடித்து காப்பாற்றினேன். எங்கள் இருவரை தவிர வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.