5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால், இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையெனில், இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

2ஜி, 3ஜி, 4ஜி ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 5 முதல் 6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அரசே கூறியது. ஆனால், இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது. இதில், மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதனால், டிராய் தலைவர் வினோத் ராய் யாருக்காக இதை செய்தார் என விசாரிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் அமைச்சர் என்பதை மறந்து குறுகிய அரசியலில் நடந்து கொள்ளும் அமைச்சர்கள் மாநில கட்சியையும், மாநில அரசையும் குறிப்பிட்டு பேசுவது அவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மைக்குள் வந்து உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.