அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், ”ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் எஃப்.பி.ஐ. (FBI) அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனை அவசியமற்றது மற்றும் முறையற்றதும் கூட என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் சதி வேலைதான் இது என குற்றம்சாட்டிய அவர், நீதி அமைப்பை ஆயுதமாக்கி உபயோகிப்பதாகவும் கூறினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை ட்ரம்ப் கொண்டு சென்ற நிலையில், இதுகுறித்து சோதனை நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. ட்ரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எஃப்.பி.ஐ. தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த சோதனை குறித்து எஃப்.பி.ஐ. இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.