வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு இருப்பதாக, மனைவி சந்தேகப்பட்டதால் கணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் கமிஷனர் காலனியைச் சேர்ந்தவர்கள் அலாவுதீன், சுனிதா தம்பதி. கணவர் அலாவுதீன் தனியார் மருத்துவமனையில் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார். மனைவி சுனிதா வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்து வருகிறார். மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியருடன் அலாவுதீனுக்கு தொடர்பு இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் வதந்தி பரவியிருக்கிறது. நிர்வாகத்தின் உயர் மருத்துவர்களுக்கு இந்த தகவல் சென்றவுடன், அலாவுதீனின் மனைவி சுனிதாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
![கணவன் மீது சந்தேகம்..! வேலையிலிருந்து நீக்கிய மருத்துவமனை நிர்வாகம்..! வீடியோ பதிவுடன் சோக முடிவு..!](https://1newsnation.com/wp-content/uploads/2021/12/ea9ffda7-b032-41a6-b661-f8c9499f0833-couple-fighting-1-1024x538.jpg)
இதனால், கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரச்சனை முற்றி காவல்நிலையம் வரை சென்றுவிட்டது. சுனிதா தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட பெண்ணையும், அலாவுதீனையும் அழைத்து விசாரணை செய்தபோது இருவருக்கும் எந்த தவறான தொடர்பும் இல்லையென்பது தெரியவந்திருக்கிறது. இருந்தாலும் மனைவி சுனிதாவிற்கு நம்பிக்கையில்லாமல் அலாவுதீனுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகத்தினரும் அலாவுதீனை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.
![கணவன் மீது சந்தேகம்..! வேலையிலிருந்து நீக்கிய மருத்துவமனை நிர்வாகம்..! வீடியோ பதிவுடன் சோக முடிவு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Death-e1652873062663.jpg)
வேலை போன வருத்தத்திலும், மனைவியின் சந்தேகத்தாலும் மனமுடைந்திருந்த அலாவுதீன் உயிரிழக்க முடிவு செய்து தனது செல்போனில் அதற்கான காரணத்தையும் பதிவு செய்திருக்கிறார். அவரின் மனைவி, குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்ற நேரம் பார்த்து அலாவுதீன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். வீடு திரும்பதியதும் கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்த மனைவி சுனிதா கத்தி கதறியுள்ளார். சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், அலாவுதீன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிலிருந்த அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் பதிவிட்டிருந்த வீடியோவில் உள்ள வாக்குமூலத்தை பார்த்துள்ளனர். மனைவி சந்தேகப்பட்டதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.