சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது..
சிங்கார சென்னையில் உணவு திருவிழா என்ற 3 நாள் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் இந்த உணவு திருவிழா நாளை வரை நடைபெறுகிறது. இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், மசாலாக்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பீப் பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என்று கூறியிருந்தார்..
இந்நிலையில் சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மூன்று பீப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது. நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழா இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது..