”மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகம் மகிழ்ச்சி அடையும்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிரை காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக தன்னுடைய நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பற்றி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மக்கள் நல பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை விட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி சுமார் 4½ ஆண்டுகள் நல்லாட்சி நடத்தியவர் என்பதால் அரசுக்கு வழிகாட்டுகிறார். இதுவே எதிர்கட்சியின் ஜனநாயக கடமை.
திமுக ஆட்சி மக்களின் நல்வாழ்வுக்கு, அமைதிக்கு கொள்ளி வைத்துவிட்டு, வெறும் புள்ளி விவரங்களால் பதில் சொல்லி வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். அதிமுக ஆட்சி என்றால், மக்களுக்கு இன்னல்கள் இன்றி, சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் அடங்கி, அமைதி தவழும். திமுக ஆட்சியில் ரவுடியிசம் மட்டுமே நிலைக்கும் என்பது கட்சி வேறுபாடின்றி பொது மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை ஆகும். மீதியிருக்கின்ற ஆண்டுகளாவது சட்டத்தின் ஆட்சி நடத்த முக.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மக்களை காக்கும் அறப்போரில் அறம் காத்த முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். வெற்றி பெறும் வரை, அதிமுக-வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் அணிவகுத்து நிற்பார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத் திறனற்ற திமுக அரசும், அதன் அமைச்சர்களும், எதிர்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில், மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். தமது திறமையின்மையை மறைக்க எதிர்கட்சிகளை குறை சொல்லும், மறைந்த கருணாநிதியின் மாடல் அரசு திருந்த, ஒரு வாய்ப்பு அளித்த மக்களை மீண்டும் வேதனையில் தள்ள வேண்டாம். எஞ்சி இருக்கும் காலத்தையாவது மக்களுக்கான ஆட்சியாக நடத்துவதே, இவர்கள் மக்களுக்கு செய்யும் உதவியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.