குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது.
ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2-ம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது. தமிழகம்- கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2% பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கு அம்மை சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. சென்னைக்கு ஜூலை மாதம் தினம்தோறும் 30-40 விமானம் மூலம் 5-9ஆயிரம் பயணியர் வருகை தந்தனர்.

இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் ஒரு லட்சத்து 153 பயணியர் வருகை தந்தனர். அதில் 1,987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வீடுகளில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு பாதுகாப்பாகவே இருக்கிறது. இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ அல்லது இல்லாதவர்களுக்கோ தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம் தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் ஆகியோருக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்.