முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தார். ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பது கட்டாயம் இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்வதால் தமிழகத்திற்கு ஒன்றும் பயனில்லை என்றும் விமர்சித்தார். ஸ்டாலினின் பயணம் வேறு யாருக்காவது பிரயோஜனமாக இருக்கலாம் என்றும் சாடினார். இன்று திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறதே தவிர சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு இணங்கி செல்வதைத்தான் ஆளும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும். போக்குவரத்து நிலைக் குழுவில் அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்க்காமல் அரசாணை வெளியிட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறைக்கு பொற்காலமாக இருந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.