வருமான வரித்துறையினர் அனுப்பிய வரி பாக்கி நோட்டீஸால் தினசரி கூலித்தொழிலாளி ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500 ரூபாய் தான். இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவரின் பெயருக்கு வந்திருக்கும் நோட்டீஸ் ஒன்று இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அவருக்கு வந்த நோட்டீஸில், கிரிஷ் யாதவ் வருமான வரித்துறையில் ரூ.37.5 லட்சம் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனை உடனே செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்ததும் என்ன செய்வதென்று அறியாது திகைத்த கிரிஷ் யாதவ், நேராக தான் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தை நாடியுள்ளார். பின்னர், இதுகுறித்து பேசிய அலௌலி காவல் நிலைய அதிகாரி புரேந்திர குமார், ”கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில், நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இது ஒரு மோசடி வழக்காக தெரிகிறது. மேலும் இதில், கிரிஷ் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸ் பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.