இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை, லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு பணியில் இணைந்துள்ளது.
முன்னதாக கடந்த வருடம் நடந்த இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 3 பேர் படப்பிடிப்பு தள விபத்தில் உயிரிழந்தனர். அதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டானது. தற்போது பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) சென்னையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுக்க இந்தியன் 2 படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்திருப்பதாக நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் சார்பில் நேற்று இரவு 12.01-க்கு இந்த தகவல் சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுபாஸ்கரன் இணைந்து தயாரிப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுடன், படத்தில் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ”He is Back” என்ற வரிகளுடன் இந்தியன் முதல் பாகத்தில் முதியவராக வந்த தோற்றத்தில் கமல் நடிக்கிறார்.