ஜி-பே, போன்- பே போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் அல்ல என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டீ கடைகள் தொடங்கி, பிரம்மாண்ட மால்கள் வரை மக்களின் பண வர்த்தனையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன ஜி-பே, போன்- பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள். முன்பு ஆயிரக்கணக்கான ரூபாய் அளவிற்கு மட்டுமே இந்த டிஜிட்டல் தளங்கள் மூலம் பணி பரிவர்த்தனை நடைபெற்று வந்தது. தற்போது 10 ரூபாய்க்கு கீழ் உள்ள தொகையைகூட ஜி-பே, போன்- பே போன்றவற்றின் மூலம் அனுப்ப முடிகிறது. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஏற்படும் சில்லரை தட்டுப்பாட்டை களைவதிலும் இந்த டிஜிட்டல் பேமெண்டுகள் முக்கிய பலன் அளிக்கின்றன.

பொதுமக்களுக்கு மிகுந்த பலன் அளித்து வருவதாக கூறப்படும் இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது குறித்தும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளிலும் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதனால் ஜி-பே, போன்- பே, பேடிஎம் உள்ளிட்ட யூபிஐ டிஜிட்டல் தளங்கள் மூலம் இலவசமாக பணபரிவர்த்தனை செய்வது தடைபட்டுவிடுமோ என்று அதனை பயன்படுத்துபவர்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யூபிஐ மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை சேவை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க இது உகந்த நேரம் அல்ல என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவித்தார். இந்த சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்கு இது போன்ற இலவச டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார். பண பரிவரித்தனையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறைகளை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.