11ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்று எடுத்து வெளியில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே இறந்த நிலையில் ஆண் சிசு சடலம் ஒன்று கிடந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசுவின் சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது என்பதும், புவனகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கழிவறைக்கு சென்றபோது குழந்தை இறந்து பிறந்ததும் தெரியவந்தது. பின்னர், மாணவி இறந்த குழந்தையை தூக்கி எறிந்து விட்டு வகுப்பறைக்கு சென்று இருக்கிறார். பின்னர் பள்ளி முடிந்த பின்னர் நடந்தது எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து, போலீசார் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதன் பின்னர் போலீசார் மாணவியை அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியின் சித்தப்பா மகனான 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனோடு நெருங்கி பழகியதும், அதன் காரணமாகவே கர்ப்பம் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார். பள்ளி கழிவறைக்கு சென்றபோது குழந்தை பிறந்ததால் தூக்கி எறிந்து விட்டு வந்ததாகவும் சிறுமி தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியும், அவருடன் தொடர்பில் இருந்த மாணவரும் 18 வயதிற்கும் குறைவான சிறுவர், சிறுமி என்பதால் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.