இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட உள்ள நேதாஜியின் பிரம்மாண்ட சிலையை செதுக்க சிற்பிகள் 26,000 மணிநேரம் செலவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா அவென்யூ வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்… மேலும் இந்தியா கேட் பகுதியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை மோடி திறந்து வைக்கிறார்.. பிரதமர் நரேந்திர மோடி மாலை 7 மணிக்கு சிலையை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் 28 அடி உயரமுள்ள இந்த சிலையை செதுக்க சிற்பிகள் குழு 26,000 மணிநேரம் செலவிட்டதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சிலை 280 மெட்ரிக் டன் எடையுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டது. தற்போது இந்த சிலையின் எடை 65 மெட்ரிக் டன்னாக உள்ளது.. தெலுங்கானாவில் உள்ள கம்மத்தில் இருந்து புது தில்லிக்கு 1,665 கிமீ தூரம் பயணிக்கும் வகையில் ராட்சத கிரானைட் சிலைக்காக 140 சக்கரங்கள் கொண்ட 100 அடி நீள டிரக் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை அருண் யோகிராஜ் தலைமையிலான சிற்பிகள் குழுவால் முற்றிலும் “பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கையால் செதுக்கப்பட்டுள்ளது” என்று மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது..
சிலை திறப்பு விழாவை முன்னிட்டு, இந்தியா கேட்டில் சிலை நிறுவும் பணி நேற்று நடைபெற்றது. செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு இந்தியா கேட்டில் நேதாஜியின் வாழ்க்கை குறித்த 10 நிமிட சிறப்பு நிகழ்ச்சி திட்டமிடப்படும். கலாச்சார விழா மற்றும் ட்ரோன் ஷோ ஆகிய இரண்டும் பொதுமக்களுக்கு இலவச நுழைவுடன் திறக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 21 அன்று, நேதாஜிக்கு தேசத்தின் “கடமையின்” அடையாளமாக கிரானைட் கற்களால் செய்யப்பட்ட பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..