தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி காட்டுப்பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து உடனடியாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார். இதையடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:- நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகள் இசக்கிலட்சுமிக்கும் (23), அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் கடந்த 1-ஆம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், இசக்கிலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவருடன் திருமணத்திற்கு முந்தைய நாளான கடந்த 31-ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் ஓடிப்போன இருவரையும் தேடி வந்தனர். ஓடிப்போனவர்கள் மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராம்குமார், இசக்கிலட்சுமி இருவரும் சென்னையில் தங்கி இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இசக்கிலட்சுமி தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் மர்மநபர்கள் இரண்டு பேர் பைக்கில் இசக்கிலட்சுமி தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இசக்கிலட்சுமியை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு துப்பாக்குடி காட்டுப்பகுதியில் வைத்து இசக்கிலட்சுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை காவலதுறையினர் தேடிவருகின்றனர். கடையம் அருகே பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.