மைசூருவில் இருக்கும் தூரா கிராமத்தில் வசித்து வருபவர் சோமண்ணா (50). இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மூன்று பசுமாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் சோமண்ணா வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அப்போது சோமண்ணா அங்கிருந்த ஒரு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தார்.
அவரது பசுமாடுகளை காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து ஜெயப்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சோமண்ணாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மாவட்ட அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் யாரோ மர்ம நபர்கள், சோமண்ணாவை அடித்து கொலை செய்துவிட்டு மூன்று பசுமாடுகளையும் திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறுகின்றனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.