நடிகர் ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
80-களின் இறுதியில் இருந்து, 90-களின் தொடக்கம் வரை பரபரப்பான ஹீரோவாக இருந்தவர் நடிகர் ராமராஜன். அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவரது படங்கள் வெற்றிபெற்று வந்தது. இவரின் படத்தை தயாரித்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆன தயாரிப்பாளர்களும் உண்டு. கடைசியாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘மேதை’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வரவேற்பு குறையத் துவங்கியதால், சினிமாவில் இருந்து விலகினார்.

அதன்பின் அரசியலில் தீவிரமாக இயங்கி வந்தார் ராமராஜன். அவ்வப்போது வரும் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திர வாய்ப்புகளையும் மறுத்து, நடித்தால் ஹீரோதான் என்ற முடிவுடன் இருந்தார். தற்போது அவரது முடிவுக்கு ஏற்ப மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகிறார். படத்திற்கு ‘சாமானியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நரேன், மீனா நடித்த ‘தம்பிக்கோட்டை’ படத்தை இயக்கிய ராஹேஷ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். மேலும் ,இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ராதா ரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இது ராமராஜன் நடிக்கும் 45-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.