காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கட்டாய மதமாற்ற தடை மசோதாவை கர்நாடக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
கர்நாடகா அரசு, கட்டாய மத மாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த மசோதாவை சட்டமன்றக் குழு கடந்த வாரம் அனுமதித்தது. இந்நிலையில் கட்டாய மதமாற்ற மசோதா நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மதமாற்ற எதிர்ப்பு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கண்டித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.. காங்கிரஸின் துணைத் தலைவர் யு டி காதர், கட்டாய மதமாற்றத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள், ஆனால் இந்த மசோதாவின் நோக்கம் சரியானது அல்ல என்றார்.
இதனிடையே இந்த சட்டத்தால் எந்த குழப்பமும் ஏற்படாது, இது எந்த வகையிலும் மத சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல என்றும் உள்துறை அமைச்சர் ஜனனேந்திரா இந்த மசோதாவை ஆதரித்தார். எனினும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.. இப்போது இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
கட்டாய மதமாற்றம் மற்றும் வெகுஜன மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.25,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது..