முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது’ என்ற பழமொழி தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையிலேயே முதியோர் ஓய்வூதியத் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று பயனாளிகள் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் தான் மிச்சம். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழையெளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
முதியோர் ஓய்வூதியம் என்பது அரசு அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அவர்களுடைய வருமானம், வறுமை நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இவ்வாறிருக்க, முதியோர்களுக்கு இருக்கின்ற சொத்துகளின் அடிப்படையிலோ அல்லது அவருடைய பிள்ளைகளுடைய வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் வீடுகளில் உள்ள பொருள்களின் அடிப்படையிலோ ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார்கள் என்று தெரிவித்து அவர்களுக்கு கொடுக்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தினால் அது ஏற்கத்தக்கதல்ல
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்துப் பயனாளிகளும் தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.