தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் 6 இடங்களிலும், பொள்ளாச்சியில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 2 இடங்களிலும், இராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டம், தாம்பரம், கடலூர், மேட்டுப்பாளையம், மதுரை உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்கள் பாஜக மற்றும் இந்து முன்ணணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக, நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து இந்தியா முழுவதும் 106 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்த அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என வலதுசாரிகள் அமைப்புகள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே, காவல்துறை விசாரணையில் எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். கிட்டதட்ட தமிழ்நாடு முழுவதும் 20 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மாநிலம் முழுவதும் நடைபெற்று இருப்பதால் இவ்வழக்கு அனைத்தையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறமிருக்க மாநில உளவுத்துறையில் தீவிரவாத அமைப்புகள் குறித்து விசாரிப்பதில் புலமை பெற்ற ஆய்வாளர் ஒருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்போது நடைபெற்ற சம்பவங்களுக்கும், இதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற அறிக்கையை தயாரித்து வருகிறார். இச்செயலில் ஈடுபட்ட நபர்களை ஒருங்கிணைத்தவர் யார் ? இவர்களுக்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைத்தது போன்ற தகவல்களை சேகரிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.