தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்..
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ) போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து பேசிய லாலு பிரசாத் “PFI போன்றே, RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.. PFI மீது விசாரணை நடந்து வருகிறது.. அதே போல் RSS அமைப்பையும் விசாரிக்க வேண்டும். நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. நாட்டில் இந்து முஸ்லீம் மதவெறியை பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
லாலுவின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கூறிய அவர், லாலு யாதவ் தன்னை பி.எஃப்.ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் “ பீகாரில் அவர்களுக்கு ஆட்சி இருக்கிறது, உங்களுக்கு தைரியம் இருந்தால், பீகாரில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்யுங்கள்” லாலு பிரசாத் யாதவுக்கு கிரிராஜ் சிங் சவால் விடுத்தார்..
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்க இயக்குநரகம் ஆகியவை சமீப காலங்களில் நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு பெரிய அளவிலான சோதனைகளை நடத்தியுள்ளன. 15 மாநிலங்களில் 106 PFI தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நாடு முழுவதும் PFI மற்றும் அதன் துணை அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.. இந்த தடையை தொடர்ந்து, அந்த அமைப்பு இயங்கி வந்த 17 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைத்து அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..