பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது..
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு பெரிய அளவிலான சோதனைகளை நடத்தியுள்ளன. 15 மாநிலங்களில் 106 PFI தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சோதனையில் பல சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.. இந்த சோதனைக்கு எதிராக பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின..
இதையடுத்து நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு, அந்த அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.. இந்த தடையை தொடர்ந்து, அந்த அமைப்பின் இணையதள பக்கமும் முடக்கப்பட்டது.. மேலும் பிஎஃப்ஐ இயங்கி வந்த 17 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைத்து அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்..
இந்நிலையில் பிஎஃப்ஐ அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசின் தடை நடவடிக்கையை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது..