தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு, சென்னை மாநகர போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.