சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற 40 வயது நபர் ஒரு வழக்கறிஞர். இவர் வாழ்வா சாவா என்ற மாநில கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2017 டிசம்பர் ஆத்தூர் எம்எல்ஏவாக இருந்த சின்ன தம்பியை இவர் அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுரேஷ் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 17 இல் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பின் ஜாமினில் வெளிவந்த அவர் ஆத்தூர் டவுன் போலீஸ் குறித்து வாட்ஸ் அப்பில் ஒரு புகார் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழலில், அவரது வீட்டில் சுரேஷ் அழுகி பிணமாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.