காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, குடும்ப தலைவனை குடும்பமே அடித்துக் கொன்று தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்திற்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் விவசாய நிலத்தில் ஆண் உடல் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பசுவந்தனை போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், தீ வைத்து எரிக்கப்பட்டவர் குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் (42) என்பதும் இவர் மீன் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஞானசேகரின் மனைவி சலைத்ராணி (38) மற்றும் அவர்களது 2 மகள்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, அதே ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24), ஞானசேகரின் மூத்த மகளை காதலித்துள்ளார். மேலும், கார்த்திக்கிற்கும், ஞானசேகரின் மனைவிக்குமே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இந்த விவரம் அறிந்த ஞானசேகர், மனைவி மற்றும் மகளையும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஞானசேகர் இரவு தூங்கச் சென்றதும், மனைவி சலைத்ராணி மற்றும் அவரது மகள்கள் செல்போன் மூலம் நடந்த விவரத்தை கார்த்திக்கிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கார்த்திக்குடன் சேர்ந்து ஞானசேகரை கம்பி, அரிவாளால் குடும்பமே தாக்கியுள்ளனர்.

பின்னர், உடலை சாக்கு மூட்டையாக கட்டி, காரில் ஏற்றிச்சென்று விவசாய நிலத்தில் தீவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், சலைத்ராணி மற்றும் அவரது 2 மகள்கள் என 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கார்த்திக்கின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.