மடாதிபதி ஒருவர், பள்ளி சிறுமிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மற்றும் பெண் வார்டன் பசவாத்தியா, மைசூரு சீடர் பரமசிவய்யா, கங்காதரய்யா, பசவலிங்கா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் 1 ஆம் தேதி மடாதிபதியை போக்சோ வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட 2 மாணவிகளின் தாய் அளித்துள்ள புகாரில், “கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமை காரணமாக 2 மகள்களுடன் முருக மடத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். அதே மடத்தில் 2 மகள்களும் தங்கி படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களை மடத்தின் இருந்த பள்ளியிலேயே நான் சேர்த்தேன். தற்போது முதல் மகள் 3ஆம் வகுப்பும், இரண்டாவது மகள் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாங்கள் ஒரே மடத்திற்குள் இருந்தாலும் மகள்களை பார்ப்பதற்கு அனுமதியில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு மூத்த மகளை முருக மடாதிபதியை பார்ப்பதற்காக அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் பலாத்காரம் செய்துள்ளார். 2020ஆம் ஆண்டு 2-வது மகளையும் மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இரண்டு பேரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மகள்கள் வயதுக்கு வரும்வரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல மைசூருவை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 மாணவிகளையும் மடாதிபதி பலாத்காரம் செய்துள்ளார்கள்” என்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.