ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்தது தெரியவந்துள்ளது.
இதை பார்த்த சிலர் அவர் வாகனத்தில் அடிபட்டு விடுவார் என்று அச்சம் கொண்டு அவரை கை தாங்கலாக அழைத்துச் சென்று சாலையின் ஓரத்தில் விட்டார்கள். ஆனால், அவர் வேண்டுமென்றே வந்து நடுரோட்டில் படுத்துக்கொண்டு கலாட்டா செய்துள்ளார்.
அப்பொழுது, அவர் பாட்டிலுக்கு 15 ரூபாய் அதிகமாக இருப்பதாகவும் பத்து ரூபாய் பத்தாமல் வேறொருவரிடம் கேட்டு கஷ்டப்பட்டு மது வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் மதுவை நியாயமான விலைக்கு விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட போலீசார் வந்து அந்த பெண்மணியை சாலை ஓரமாக அழைத்து வந்து அவருக்கு உணவு வாங்கி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.