போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், வரும் 28ஆம் தேதியில் இருந்து புதிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய தகவல் மையத்தில் புதிய அபராத தொகை குறித்து வெளியிடப்பட்டதை அடுத்து இன்று முதலே புதிய அபாரத தொகை வசூலிக்கும் முறை அமலுக்கு வருவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதக் கட்டணம் பல மடங்கு உயர்ந்த நிலையில், எந்தெந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபாரத்தை தொகை என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாயும், 2-வது முறை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். உரிய பதிவெண்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு முதன்முறை 2,500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 5 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் என கூறப்பட்டுள்ளது. வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது விதிகளை மதிக்காமல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலோ அல்லது, அதிக புகையுடன் வாகனங்களை ஓட்டி சென்றாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஃபோன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கினால், முதல் முறை ஆயிரம் ரூபாய், 2-வது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.