தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு வந்தவுடன் ரோஹித் ரெட்டி இதுகுறித்து போலீசாருக்கு தொடர்பு கொண்டு, லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வந்த 3 நபர்களைக் கைது செய்தனர். ஹரியானாவைச் சேர்ந்த சதீஷ் சர்மா, திருப்பதியை சேர்ந்த சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

4 எம்எல்ஏ-க்களில் ஒருவருக்கு 100 கோடி ரூபாயும், மற்ற 3 எம்எல்ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, பேரம் பேசப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சந்திரசேகர் ராவிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர். இவ்விவகாரம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.