பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகின்றார்.
சென்னை ராமச்சந்திரபுரா மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது அவருக்கு பதில் , திமுக இளைஞர் அணி செயலாளரும் , சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரும் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டு செல்கின்றார். நாளை நடைபெறும் 115வது பிறந்த நாள், குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் அவர் பங்கேற்கின்றார்.
இதனிடையே தற்போது முதல்வர் ஸ்டாலின் சென்னை நந்தனத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து அரசுப் பணிகளை அவர் வீட்டில் இருந்தபடியே மேற்கொள்வார் என கூறப்படுகின்றது.
ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.