15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோன தாயார், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தார்.

அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் (40) என்பவரே காரணம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வெங்கடேசனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், வெங்கடேசனின் வீட்டில் சிறுமியும், அவரது தாயாரும் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். வெங்கடேசன் கொத்தனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். ஆனால், குடும்ப தகராறு காரணமாக 2 மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் தாய் விஜயா (67), சகோதரி லலிதா (42) ஆகியோர் தங்கி உள்ளனர். வீட்டு உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

இந்நிலையில், சம்பவத்தன்று வெங்கடேசன் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல், வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும், வெங்கடேசனின் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து ஆவடி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேசன், வேங்கையன், உடந்தையாக இருந்த விஜயா, லலிதா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.