ஆட்சியாளர்களின் கைப்பாவையாக தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’‘ முத்து ராமலிங்க தேவர் ஐயா தமிழகத்தின் முக்கியமான காலக்கட்டத்தில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்திருக்கின்றார். தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகின்றார்கள்.
குறிப்பாக ஆளும் அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் மறைக்கலாம், எதை வேண்டுமானாலும் நடத்தலாம் என்கின்ற மிதப்பில்தான் உள்ளார்கள். தற்போது, தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லா நிலைதான் உள்ளது. எனவே மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றார்கள். முத்து ராமலிங்க தேவரின் சித்தாந்தம் மற்றும் கொள்கையை பா.ஜ.க.வால் மட்டும் தான் செயல்படுத்த முடியும் ’’ என தெரிவித்துள்ளார்.