சென்னையில் பதினைந்து வயது பள்ளி மாணவி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்-வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி. திடீரென இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மண்ணடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு நந்தினியை அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு அல்சர் பிரச்சனையால் வலி வந்ததாகவும் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு செவிலியர்கள் சிறுமிக்கு ஊசி ஒன்றை போட்டனர். இதனால் உடல் நிலை மோசமாகியுள்ளது. உடனடியாக ஐ.சி.யு.வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மகள் வீடு திரும்புவாள் என எதிர்பார்த்த நிலையில் திடீரென நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அல்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். தவறான சிகிச்சையால் நான் என் மகளை இழந்துவிட்டேன். 6 வருடங்கள் குழந்தையில்லாமல் பிறந்த மகளை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதனர்.
மருத்துவமனையில் செவிலியர்கள் ஏதோ ஊசி போட்டு கொன்றதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக புகாரை பெற்றுக் கொண்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே விரிவான தகவல்கள் கிடைக்கும்.