செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் ஊரப்பாக்கம் பாலாஜி என்ற நகரில் வசித்து வருபவர் நசீமா (16). அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, சென்ற இரு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, சரியாக படிக்கவில்லை என்று உணவு இடைவேளை வரையில் வருத்தமாகவும், மன அழுத்தமாகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது.
அதன் பின்னர், பிற்பகலில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், பள்ளியின் 3வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் மாணவி நசீமாவுக்கு பின்புறம் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவி நசீமா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்தும் விசாரணை செய்தும் வருகின்றனர்.