அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓராண்டு பணி அனுபவம் “கட்டாயம்” என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். புதிய விண்ணப்பதாரர்கள் நேரடியாக அரசுப் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், தனியார் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.
வடக்கு கோவாவில் உள்ள தலீகாவ் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், எதிர்காலத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாக்கப்படும் என்றார். இத்தகைய நடைமுறையானது திறமையான மனிதவளத்தைப் பெற அரசுக்கு உதவும் என்றார்.
காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்று முதல்வர் கூறினார். எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.