வங்கக்கடல் பகுதியில் நாளை (நவம்பர் 16) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு – கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது எனவும் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.