சென்னை விமான நிலையத்தில் தரை தளப் பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள புறப்பாடு, தரை இறங்குவது மற்றும் பயணிகளின் உடைமைகள் வருவது ஆகியவற்றின் கால தாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது, விமான பயணிகளின் உடைமைகளை கையாள்வது போன்ற தரைத்தளப்பணிகளை செய்வதற்காக தற்போது கிரவுண்ட் ஹோல்டிங் ஏஜென்சி ஒன்று மட்டுமே உள்ளது.
கரோனா, ஊரடங்கு காலம் முடிந்து தற்போது சகஜ நிலை திரும்பி உள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால், கிரவுண்ட் ஹோல்டிங் ஏஜென்சி, ஒரு ஏஜென்சியை வைத்து சமாளிப்பது கடினமாக உள்ளதாக கூறப்பட்டது. எனவே விமான நிலையத்தில் புதியதாக இரண்டு கிரவுண்ட் ஹோல்டிங் தனியார் ஏஜென்சிகளை, இந்திய விமான நிலைய ஆணையம் நியமித்துள்ளது.
புதிய ஏஜென்சிகளிடம் அதி நவீன கருவிகள் மற்றும் திறமையான பணியாளர்கள் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவது, புறப்பாடு பான்ற தரை தளப்பணிகள் துரிதமாகும். விமானப் பயணிகளின் உடைமைகளை கையாள்வதும் அதிவேகமாக நடக்கவிருப்பதால், பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்படாது. இந்த புதிய 2 ஏஜென்சிகளிலும், 4000 பேர் வரை பணி அமர்த்தப்பட உள்ளனர். எனவே சென்னை விமான நிலையத்தில் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.