திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதெல்லாம் இன்றைய யூத்களுக்கு கவலையில்லை. திருமணத்திற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்று சொர்க்கத்துக்கு அருகே ப்ரீ போட்டோஷூட் செய்ய முடியுமானால், அது தான் பேரானந்தம் என்கிற ரீதியில் காலம் போய் கொண்டிருக்கிறது. கோவில் தூண்களில் இடுப்பை அசைத்தப்படியே ஆட்டம் போடுவது, இடுப்பளவு நீரில் எவனோ சொல்லிக் கொடுக்க, மனைவி கீழே விழாமல் வளைந்தப்படியே பிடித்துக் கொள்வது என ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்களின் அலப்பறை அதிகமாகி வருகிறது. சில இடங்களில் கல்யாணப் பெண் கூச்சத்துடன் நெளிய, பல இடங்களில் இன்ஸ்டா, ட்விட்டர் என போஸ்ட் செய்ய செல்ஃபி புகைப்படங்களுக்காக இவர்கள் செய்கிற சாகசங்கள் அடிவயிற்றைக் கலங்கடிக்கிற ரகம்.
அப்படி ஒரு ரகம் தான் கேரளாவில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது. கேரள மாநிலம் கொல்லம் அருகே திருமணத்திற்கு முந்தைய நாள் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக மணமகனும், மணமகளும் சென்ற இடத்தில், 150 அடி உயர பாறை மீது நின்றபடியே செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார் மணப்பெண் சாண்ட்ரா. புது பொண்டாட்டி கேட்டா மறுக்க முடியுமா? தலையசைத்து அழைத்துச் சென்றிருக்கிறார் மாப்பிள்ளை வினு. அப்போது, கால் இடறி உயரத்தில் இருந்து குவாரி குளத்தில் மணப்பெண் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட வினு குளத்தில் குதித்து சாண்ட்ராவை காப்பாற்ற முயன்றுள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் நாவாய்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரும் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதுகெலும்பு மற்றும் கால்களில் காயம் அடைந்த சாண்ட்ராவுக்கு மருத்துவமனை நிர்வாகம் 3 மாதங்கள் முழு ஓய்வு அளிக்க அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க சென்றதால் திருமணமே நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.