காதலியின் ஆபாச படத்தை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருப்போரூரை அடுத்துள்ள மேலையூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பிரவீன்குமார் (22). இவர், மறைமலைநகர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் கல்வாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்து வந்ததாகவும், 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்து டிகிரி முடித்ததாகவும் தெரிகிறது. மேலும், இரண்டு பேரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பிரவீன்குமார் காதலித்த பெண், தன்னை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என்றும், தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார், ‘என்னை காதலித்து விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தால் நாம் 2 பேரும் ஒன்றாக இருந்த நிர்வாண படங்களை வெளியிடுவேன்’ என்று கூறி மிரட்டியுள்ளார்.
மேலும், அவரை காட்டுப்பகுதிக்கு வரவழைத்து கடைசியாக என்னுடன் ஒருநாள் இருக்க வேண்டும் என்று கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதையும் வீடியோ எடுத்துக் கொண்டு, நான் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறி காதலியை மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன அந்த இளம்பெண் இதுகுறித்து தனது சகோதரரிடம் கூறி விட்டு தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார். இந்நிலையில், அந்த பெண்ணின் பெற்றோர் காயார் போலீசில் தங்களது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். மேலும், பிரவீன்குமாரை காதலித்ததும், அவர் நிர்வாண படங்களை வைத்து மிரட்டியது பற்றியும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரையும், அப்பெண்ணையும் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னலை வைத்து அப்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் பிரவீன்குமாருக்கு வலை விரித்தனர். இதனால், மற்றொரு செல்போன் மூலம் அப்பெண்ணை தொடர்பு கொண்ட பிரவீன்குமார், ‘என்னை போலீசில் சிக்க வைத்து விட்ட உன்னை பழி வாங்குகிறேன்’ என்று கூறி அப்பெண்ணுடன் இருந்த நிர்வாண படங்களை வாட்ஸ்அப் மூலம் அந்த பெண்ணின் ஊரை சேர்ந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த போலீசார் அங்கு சென்று பிரவீன்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி கூறுகையில், ”பள்ளியில் படிக்கும்போதே பெண் குழந்தைகளுக்கு செல்போனை கொடுப்பதால் பலருடன் தொடர்பு ஏற்பட்டு இதுபோன்ற நபர்களுடன் புரியாமலே பழகி காதல் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து அதை படம் எடுத்து மிரட்டும் நபர்களிடம் அடிமையாகி சிக்குகின்றனர். ஆகவே, பெற்றோர்கள் பள்ளி, கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்” என்றார்.