கொச்சியில் பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமரியை சேர்ந்த பெண் உள்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ”குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் தங்கியிருந்துள்ளார். இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இது பற்றி அவர் நண்பர் ஒருவரிடம் கூறியபோது, அவர் மந்திரவாதி ஒருவர் இருப்பதாகவும் அவரை சந்தித்து பேசினால் அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, மந்திரவாதியிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பூஜை நடத்தினால் பிரச்சனை சரியாகும் என்று கூறியுள்ளார். இதற்காக பூஜை ஏற்பாடுகள் நடத்திய போது மந்திரவாதியும் பெண்ணின் நண்பரும் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த பெண் ஒட்டு கேட்டபோது அவர்கள் பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதனை சுதாகரித்துக் கொண்ட அந்த பெண் அங்கிருந்து தப்பி, உறவினர்கள் உதவியுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.