குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலீசார் 2 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடையமும் கிடைக்கவில்லை. பின்னர்தான் செல்போனில் வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, யார் இந்த தகவலை சொன்னது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது மனைவி சாந்தி பிரிந்து சென்றதால் அவரை பழிவாங்க மதுபோதையில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.