மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் நிறைவடையுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 2.62 பயனாளர்களில், இன்று வரை 1.61 கோடி பயனாளர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட உள்ளது. ஜனவரி 31க்கு மேல் இல்லாமல், அதற்கு முன்பாக இணைக்க கேட்டு கொள்கிறோம். மேலும் ஜனவரி 31க்கு பிறகு கால நீட்டிப்பு இருக்காது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அந்தந்த பகுதிகளுக்கு சென்று சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. நாளை புத்தாண்டு என்பதால், சிறப்பு முகாம்கள் நடைபெறாது. பெயர் மாற்றம் செய்தாலும் இணைத்து கொள்ளலாம். கடன் சுமை, நிதி நெருக்கடியை குறைப்பதற்கும் மின் வாரியம் லாபகரமாக இயங்குவதற்கும், வீணாகும் மின்சாரத்தை குறைப்பதற்கும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். இதுவரை 40,306 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.