நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருந்தாலும் கூட, நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க முடியாது என்பதன் அடிப்படையில் குற்றங்களை கண்காணிப்பதற்கு காவல் துறையை நியமனம் செய்தது.
இந்த காவல்துறையின் வேலை குற்றங்களை கண்காணிப்பதும், குற்றங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதும் தான். ஆனால் இந்த காவல்துறையில் இருக்கும் அதிகாரிகளே ஒரு சில சமயங்களில் குற்றங்களில் ஈடுபடுவது உண்டு.
அப்படி ஒரு சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் பிலோதாவில் 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு விவசாயியின் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது இது தொடர்பாக தகவல் அறிந்த பிலோதா காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றை சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், அந்த கிணற்றில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. அதில் ஒரு பெண்ணின் கையில் ஹெச்.பி என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் பெயர் ஹசுமதி என்று கண்டுபிடித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய கணவரும், காவல்துறை அதிகாரியுமான அரவிந்த் மார்டா தாமூர் என்பவரை காவல்துறையினர் விசாரித்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. அதாவது அந்த காவல்துறை அதிகாரி தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் உண்டான தகராறில் மனைவி மற்றும் தன்னுடைய 5 வயது குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த காவல்துறை அதிகாரி மகள் மற்றும் மனைவியின் உடலை 21 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசி உள்ளார். இந்த செயலில் அவருடன் 2️ பேர் இணைந்து செயல்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக ஆரவள்ளி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த நிலையில் தான் குற்றம் சுமத்தப்பட்டவரான அரவிந்த் மார்டா தாமூர் அவர்களின் காவல்துறை அதிகாரி பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கும், அவருடன் இருந்த 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.