மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்..
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.. இந்த திட்டம், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், தேசிய வளர்ச்சியில் ஈடுபடுவதற்கும் முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..
அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. இந்நிலையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.. வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த கடிதங்களை பிரதமர் மோடி வழங்குவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.. பணி நியமனம் பெற்றவர்களிடம் மோடி உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது..
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பணியாளர்கள், ஜூனியர் இன்ஜினியர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், ஸ்டெனோகிராபர்கள், இளநிலை கணக்காளர்கள், இந்திய அஞ்சல் அலுவலக பணி, வருமான வரி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் போன்ற பணிகளில் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..