திருவனந்தபுரம் அருகே பெருமாதுறை பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ஜசீர் (26). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கொல்லம் அருகே உள்ள குண்டரா பகுதியைச் சேர்ந்த ஒரு பிளஸ்1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவியை நேரடியாக பார்க்க வேண்டும் என்று ஜசீர் கூறியுள்ளார். அதற்கு மாணவியும் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஜசீர், ஒரு காரில் குண்டராவுக்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மாணவி வழக்கம்போல பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஜசீருடன் கார் ஏறிச் சென்றுள்ளார். பின்னர், மாணவியை ஜசீர் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே, பள்ளி சென்ற மாணவியை காணாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது மாணவிக்கும், ஜசீருக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கிய நிலையில், மாணவியை ஜசீர் பாலோட்டில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அங்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு உடன் இருந்த ஜசீரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பெருமாதுறை பகுதியை சேர்ந்த நவுபல், நியாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜசீர் மீது 4 கிரிமினல் வழக்குகளும், நவுபல் மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளும் உள்ளன. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் போலீசார் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.