ஹாட்ரிக் வெற்றியால் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 101 ரன்களும், சுப்மான் கில் 112 ரன்களும் விளாசினர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது.
தற்போது நியூசிலாந்து அணியை முழுமையாக வீழ்த்தியதன் மூலம் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து 6 புள்ளிகளை இழந்து 111 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக (3-0) வெல்லும் பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.