முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. உதகை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இதுவரை 217 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது.. மேலும் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது..
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது.. அந்த வகையில், கோடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 240-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இந்த சூழலில் முதன்முறையாக தொழிலதிபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை தொடங்கினர்.. குறிப்பாக மணல் ஒப்பந்ததாரர்களான ஆறுமுகசாமி மற்றும் அவரின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.. கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது..
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஆறுகுட்டி, அவரது மகன் அசோக் பாபுவிடம் ஏற்கனவே விசாரணை நத்திய நிலையில் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது..
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் இறப்பதற்கு முன் அப்போது எம்.எல்.ஏவாக இருந்த ஆறுகுட்டிக்கு 4 முறை மொபைலில் அழைத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு ஆறுகுட்டியிடம் ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.. கடந்த ஏப்ரல் மாதமும் அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் விசாரணை என்பது குறிப்பிடத்தக்கது..