பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.. மேலும் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.. 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியானது.

இந்த படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.. இதனிடையே RRR படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குலோப் விருது கிடைத்தது.. சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றார்..
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக RRR படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது.. இதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதுக்கு நாட்டு கூத்து பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. சர்வதேச அளவிலான 5 பாடல்களின் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் நாட்டு கூத்து இடம்பெற்றுள்ளது.. எனவே இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
இதை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ ஆஸ்கார் விருது பற்றி நான் கனவிலும் நினைக்கவில்லை.. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணின் நடனம் மற்றும் அவர்களின் ஸ்டைல் தான் முக்கிய காரணம்.. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் அவர்கள் இருவரும் நடனமாடினர்.. RRR படத்தை ரசிகர்கள் நம்பினர்.. இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்..
இதே போல் நடிகர் ராம் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.. அவரின் பதிவில் “ நாட்டு நாட்டு” ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு மரியாதை. எங்களுக்கும் இந்தியாவுக்கும் மற்றொரு பெருமையான தருணம். இந்த விருதை பெற இசையமைப்பாளர் கீரவாணி தகுதியானவர்.. ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் RRR படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் என் நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்..
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் ட்விட்டர் பதிவில் “ இன்னொரு தகுதியான மற்றும் மகத்தான சாதனையை செய்ததற்காக கீரவாணிக்கும், பாடலாசிரியருக்கும் வாழ்த்துக்கள்.. இந்தப் பாடல் என்றென்றும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்..