பாகிஸ்தான் நாட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்த நிலையில், அவர் கராச்சி நகரை சேர்ந்த ஒரு டாக்டரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின் இருவரும் சேர்ந்து கராச்சியில் வாழ்ந்து வந்த நிலையில் பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மகளை ஒரு டாக்டர் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது அவரை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வைத்து பெண்ணின் தந்தை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்
இதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு நீதிமன்ற வளாகத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. தந்தையே மகளை நீதிமன்றத்தில் வைத்து ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தகவலின் படி அந்நாட்டில் 10 ஆண்டுகளுக்குள் 650 ஆணவ கொலைகள் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.